புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுவைக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் - ஆர்.நல்லக்கண்ணு பேட்டி


புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுவைக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் - ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2018 12:11 AM GMT (Updated: 18 Nov 2018 12:11 AM GMT)

புயல் சேதத்தை சீரமைக்க தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கஜா புயல் தமிழகம், புதுவை காரைக்காலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். மின்கம்பங்கள், மரங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சேதத்தை சீரமைக்க புதுச்சேரி, தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நிவாரணங்களை வழங்க வேண்டும். கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டுக்குரியது.

சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை இடதுசாரிகள் அரசு நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. இதில் எந்த பாகுபாடும் இல்லை. அதனை செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. இந்த விவகாரத்தில் கேரள அரசு நியாயமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநிலத்திற்கு கவர்னர் தேவையில்லை. மாநிலத்துக்கு சுய உரிமை இருக்கிறது. அந்த உரிமையை செயல்படுத்துவது தான் ஜனநாயக விதி. மத்திய அரசு கவர்னர் மூலமாக மாநில அரசை வஞ்சித்து வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியானது. எல்லா துறைகளிலும் சி.பி.ஐ. தலையீடு உள்ளது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story