ரெயில்வே சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்தது


ரெயில்வே சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 22 Nov 2018 10:00 PM GMT (Updated: 22 Nov 2018 9:00 PM GMT)

ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியில்செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்டது விவேகானந்தர் நகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு ரெயில்வே கிராசிங்கை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த பகுதியில் ஆள் உள்ள ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் இந்த பகுதியில் புதிதாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்த சுரங்கப்பாதை அமைத்தால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த எதிர்ப்பை மீறி ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைத்தது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது.

இந்த மழை காரணமாக விவேகானந்தர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 30 அடி உயரத்திற்கு மழைநீர் நிறைந்து சுரங்கப்பாதையை மூழ்கடித்துவிட்டது. அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 3 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

இதன்காரணமாக விவேகானந்தர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊருக்குள் இருந்து வெளியிலும், வெளியில் இருந்து ஊருக்குள்ளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே தனித்தீவு போல் காட்சிஅளிக்கிறது. ஏராளமான பொதுமக்கள் சுரங்கப்பாதை பகுதியில் திரண்டு தங்களின் அவலத்தை கண்டித்து கோஷமிட்டனர். உடனடியாக சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற அவதியை தவிர்க்கும் வகையில் ரெயில்வே தண்டவாள பகுதியில் தனிப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இனியும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட அடுத்த கட்ட போராட்டங்களை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தனர்.

Next Story