கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பெறப்பட்ட ரூ.74½ லட்சம் நிவாரண பொருட்கள் அமைச்சர் கருப்பணன் தகவல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பெறப்பட்ட ரூ.74½ லட்சம் நிவாரண பொருட்கள் அமைச்சர் கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2018 3:45 AM IST (Updated: 24 Nov 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட ரூ.74½ லட்சம் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கருப்பணன் கூறினார்.

புதுக்கோட்டை, 

கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு செய்தார். மேலும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அரிசி, போர்வை, பால்பவுடர், துண்டு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கருப்பணன் பிரித்து அனுப்பும் பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து மட்டங்கால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கஜா புயலினால் விழுந்த மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது;-

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பழுதடைந்த மின் கம்பங்கள் புதியதாக மாற்றியும், புயலால் முறிந்து விழுந்த மரங்களை தூய்மை பணியாளர்கள் மூலம் சீரமைத்தும், சாலைகளை சரி செய்தும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்தும், இவற்றை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க அலுவலர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரூ.38 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் சுமார் 96.575 டன் (96,575 கிலோ) அரிசி பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.16 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் துணி வகைகள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர், ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு பொருட்கள், ரூ.12 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் இதர அத்தியாவசிய பொருட்களும் என மொத்தம் ரூ.74 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் சுமார் 20 முதல் 30 வாகனங்களில் நிவாரண பொருட்கள் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு வாகனங்களின் மூலம் பிரித்து அனுப்பப்பட்டு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினர்.

Next Story