விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாண்டவபுராவில் சாலை மறியல் போராட்டம்


விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாண்டவபுராவில் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2018 4:30 AM IST (Updated: 25 Nov 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பாண்டவபுராவில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பாண்டவபுராவில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் 30 பேர் பலி

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே கால்வாய்க்குள் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். இந்த துயர சம்பவம் மண்டியா மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்ததும் சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். விபத்தில் உறவினர்கள், குடும்பத்தினரை இழந்தவர்கள் கதறி அழுதனர். அவர்களது அழுகுரலால் அந்தப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

சாலை மறியல்

இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் திரண்டிருந்தவர்கள், சிக்கபீதரஹள்ளி-கனகனமரடி வழித்தடத்தில் அரசு பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. எனவே அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டவபுராவில் மண்டியா மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பலர் சாலையில் படுத்து உருண்டனர். உறவினர்களை இழந்தவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

மந்திரிகள் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் மீட்பு பணிகளை பார்வையிட அங்கு போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, மாநில சிறிய நீர்ப்பாசனத் துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜு ஆகியோர் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், சிக்கபீதரஹள்ளி-கனகனமரடி வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்குவது பற்றி முதல்-மந்திரியுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று உறுதி அளித்தனர்.

பிரேதப் பரிசோதனை

இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் சம்பவ இடத்திலேயே பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்களும் அங்கேயே நேற்று மாலை வரை சோகத்துடன் காத்திருந்தனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story