தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 4:20 AM IST (Updated: 28 Nov 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூசி,

தூசி அருகே உள்ள சந்தைமேடு, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் ஏற்றும் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது அடைந்தது.

இதனால் அந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தைமேடு, லட்சுமிபுரம் கிராம மக்கள் நேற்று காலையில் 100-க்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், துரைசாமி மற்றும் போலீசார், வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story