ஏலகிரிமலையில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு

ஏலகிரிமலையில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் ராதாபுரம் தொகுதி இன்பரசு எம்.எல்.ஏ. தலைமையில், 8 எம்.எல்.ஏ.க்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது கலெக்டர் ராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் பெரியசாமி, வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் முருகன், தாசில்தார்கள் சத்தியமூர்த்தி, குமார், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், கனகராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இந்த குழுவினர் இயற்கை பூங்கா, கோடை விழா மைதானத்தை பார்வையிட்டனர். பின்னர் இன்பரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து சட்டமன்றத்திற்கு அறிக்கை அளிப்பது இந்த குழுவின் கடமை. ஜனநாயகத்தின் எஜமான்கள் மக்கள் தான்.
எனவே மக்களுக்கு அளிக்கப்படும் உறுதிமொழியை அரசு அதிகாரிகள் நிறைவேற்றுகிறார்களா? அப்படி நிறைவேற்றப்பட்டுள்ள உறுதிமொழிகள் என்னென்ன? நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் எவை எவை? என தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக இந்த குழு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை எவ்வளவு இருக்கும் என கேட்டதற்கு ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பின்னர் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், ஏலகிரிமலையில் நிரந்தர கோடை விழா கலை அரங்கம் அமைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது, அதற்காக ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என கூறி அதற்கான வரைபட நகலை வழங்கினார்.
Related Tags :
Next Story