ஆசிரியையை காரில் கடத்திய 3 பேர் கைது காதலிக்க மறுத்ததால் கடத்தியது அம்பலம்


ஆசிரியையை காரில் கடத்திய 3 பேர் கைது காதலிக்க மறுத்ததால் கடத்தியது அம்பலம்
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 2 Dec 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே ஆசிரியையை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காதலிக்க மறுத்ததால் அவர் கடத்தப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜெகன்நாதபிள்ளையார் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் கிரிராஜன். இவருடைய மகள் காயத்திரி (வயது 31). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்த பின்னர் காயத்திரி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காயத்திரியை வழிமறித்த சில மர்ம மனிதர்கள், அவரை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காயத்திரியை கடத்தி சென்றவர்கள் அவரை கபிஸ்தலம் போலீஸ் நிலையம் அருகே விட்டு சென்றனர்.

கைது

இதைத்தொடர்ந்து போலீசார் காயத்திரியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை கடத்தி சென்றவர்கள் குறித்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இதன்பேரில் போலீசார் காயத்திரியை கடத்திய உமையாள்புரத்தை சேர்ந்த கார்த்தி(35), பரணி(18), ராகுல்(20) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கார்த்தி கடந்த சில ஆண்டுகளாக ஒருதலையாக காயத்திரியை காதலித்து வந்ததாகவும், அவரது காதலை காயத்திரி ஏற்றுக்கொள்ளாததால் அவரை காரில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியதும் தெரிய வந்தது.

Next Story