திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே புதிய மேம்பாலத்தில் தாறுமாறாக செல்லும் வாகன ஓட்டிகள்; போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள புதிய மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் பழைய பஸ்நிலையம் முன்பு மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்ற பால பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து செப்டம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பாலம் திறந்துவிடப்பட்டது.
இதற்காக பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு ரோடுகளும் அமைக்கப்பட்டன. ஆனால் பாலத்தில் வலது பக்கத்தில் மட்டுமே பக்கவாட்டு சாலை திறந்து விடப்பட்டது. பெருமாள் கோவில் அருகே பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் இடது புறம் உள்ள பக்கவாட்டு சாலை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் காமராஜர் ரோட்டில் இருந்து பழைய பஸ்நிலையம் அமைந்துள்ள பகுதிக்கோ அல்லது தாராபுரம் ரோட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலோ பாலத்திலேயே வலதுபுறமாக திரும்பி பக்கவாட்டில் உள்ள ஒருவழி சாலையை பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் மேம்பாலத்தில் சென்று பாலம் முடியும் இடத்தில் இடது புறமாக உள்ள ஒருவழிசாலையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக பாலத்தில் சென்று வருவதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் இரும்பு தடுப்புகளை அமைத்து சில முன்னேற்பாடுகளை செய்தனர். இருப்பினும் வாகன ஓட்டிகள் அதையும் பொருட்படுத்தாமல் தாறுமாறாக ஒருவழி பாதையில் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு போலீஸ் சார்பில் பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் வரை மணல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரம்களை வைத்து அதில் தடுப்புகம்புகளை அமைத்து தடுப்பு ஏற்படுத்தினார்கள். இருப்பினும் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி வாகனங்களை மேம்பாலத்திலேயே திருப்பி கொண்டு தங்களுக்கு தேவையான இடங்களுக்கு செல்கின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும், விபத்தும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுடன், வாகன ஓட்டிகள் பாலத்தில் தாறுமாறாக செல்லாத வகையில் திட்டமிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.