மின் கட்டணம் வசூலில் முறைகேடு புகார்: கணக்கீட்டு அலுவலர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்

மின் கட்டணம் வசூலில் முறைகேடு தொடர்பாக கணக்கீட்டு அலுவலர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் மின் பகிர்மான வட்டத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் கோவில்களுக்கு மின்கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மின்வாரிய கணக்கில் வரவு வைக்காமல் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டன. அதன் அடிப்படையில் அந்தந்த கோட்ட பகுதிகளில் சிறப்பு தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது மின் கட்டணம் வசூலில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மின் கட்டணம் செலுத்துவதற்கான கணக்கீடு மற்றும் வசூல் பணியை மேற்கொண்டு வரும் கணக்கீட்டு அலுவலர்கள் 4 பேரை பணி இடைநீக்கம் செய்து மின் வாரிய அதிகாரிகள் உத்தர விட்டனர்.
அதன்படி, ஆத்தூர் கோட்டம் வீரகனூர் வருவாய் மேற்பார்வையாளர் பாலசந்தர், சேலம் கிழக்கு கோட்டம் ஏற்காடு வருவாய் மேற்பார்வையாளர் மணிவண்ணன், கணக்கீட்டு அலுவலர் யோகராஜ், சேலம் தெற்கு கோட்டம் மல்லூர் வருவாய் மேற்பார்வையாளர் சாதீக் ஆகிய 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் எவ்வளவு ரூபாய் மோசடி செய்துள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதே போன்ற முறைகேடு வேறு பகுதிகளில் நடந்துள்ளதா? எனவும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story