தேயிலை தோட்டத்தில்: தொழிலாளர்களுடன் சகஜமாக பழகும் காட்டெருமைகள்


தேயிலை தோட்டத்தில்: தொழிலாளர்களுடன் சகஜமாக பழகும் காட்டெருமைகள்
x
தினத்தந்தி 4 Dec 2018 10:15 PM GMT (Updated: 4 Dec 2018 6:55 PM GMT)

கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களுடன் சகஜமாக காட்டெருமைகள் பழகி வருகின்றன.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவை வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகும் சிறுத்தைப்புலிகள் வளர்ப்பு பிராணிகளை அடித்துக்கொன்று வருகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்வது தொடர் கதையாகி விட்டது.

கோத்தகிரியில் இருந்து கார்சிலி மற்றும் மிளிதேன் செல்லும் சாலையோரங்களில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் சுற்றித்திரிகின்றன. இவை கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளன. இதனால் அந்த காட்டெருமைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் சகஜமாக பழகி வருகின்றன. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ஆரம்ப காலத்தில் அந்த காட்டெருமைகளை கண்டு அச்சம் அடைந்தோம். ஆனால் நாளடைவில் அவற்றின் அருகிலேயே நின்று கொண்டு வேலை செய்ய பழகினோம். இதேபோன்று அவைகளும் எங்களை தாக்காமல் சகஜமாக பழகி வருகின்றன. காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட, அவைகளுக்கு இடையே நாங்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம் என்றனர்.

மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், கோத்தகிரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் காட்டெருமைகள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நட்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Next Story