ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்: வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது - இன்று பகல் பத்து முதல் திருநாள்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்: வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது - இன்று பகல் பத்து முதல் திருநாள்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 11:32 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இன்று பகல் பத்து முதல் திருநாள் ஆகும்.

திருச்சி,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழா. மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவமே வைகுண்ட ஏகாதசியாகும். இத்திருவிழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என்று மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி நேற்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் அரையர்களின் அபிநயம், வியாக்யானத்துடன் திருநெடுந்தாண்டகம் நடைபெற்றது. அப்போது அரையர்கள் திருநெடுந்தாண்டகம், மின்னுருவாய் பாசுரங்களை அபிநயத்துடன் பாடினார்கள்.

இன்று (சனிக்கிழமை) பகல் பத்து திருமொழியின் முதல் திருநாள் ஆகும். இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.15 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அரையர் சேவை நடக்கிறது. அப்போது பொதுமக்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம். பகல் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், 3 மணி முதல் 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயகாரர்கள் மரியாதையுடன் பொது ஜனசேவை நடைபெறும்.

மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புறப்பாட்டுக்காக திரையிடப்படும். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை பூஜை நேரம் என்பதால் அனுமதி கிடையாது. மாலை 6.45 மணிக்கு மேல் 9 மணிவரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.

பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருமொழி என்றும், ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருவாய் மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து திருவாய் மொழி முதல் திருநாளான 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். 24-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அம்மா மண்டபம் ரோடு, தெற்கு வாசல், வடக்கு வாசல், கிழக்கு வாசல், சாத்தார வீதி ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள், கடைகளின் மேற்கூரைகள், கீற்றுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. மேலும் நடைபாதை கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story