பொருட்கள் வாங்காதவர்களுக்கு வாங்கியதாக குறுந்தகவல் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்


பொருட்கள் வாங்காதவர்களுக்கு வாங்கியதாக குறுந்தகவல் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Dec 2018 9:30 PM GMT (Updated: 8 Dec 2018 7:07 PM GMT)

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு வாங்கியதாக குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை, 

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு வாங்கியதாக குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல்

மேலப்பாளையம் அண்ணா வீதியில் ஒரு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 900 ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 750 கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த கடைக்கு பொதுமக்கள் எப்பொழுது சென்று பொருட்கள் கேட்டாலும் பொருட்கள் இல்லை என்று தான் அங்குள்ள ஊழியர் கூறுவதாக கூறப்படுகிறது. மேலும் பொருட்கள் வாங்காதவர்களின் செல்போனுக்கு அரிசி, சீனி, பாமாயில், பருப்பு, கோதுமை வாங்கியதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் பொருட்கள் வாங்காதவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று காலையில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த கடையில் பொருட்கள் வாங்கும் மற்றவர்களும் சேர்ந்து சீராக பொருட்கள் வழங்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story