பெண் போலீசிடம் சில்மிஷம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை


பெண் போலீசிடம் சில்மிஷம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே இரவு பணியின்போது பெண் போலீசிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

திருச்சி,

தமிழக காவல்துறையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் பிரிவுகளில் ஆண் போலீசாருக்கு இணையாக பெண் போலீசாரும் பணியாற்றி வருகிறார்கள். ஆண்களுக்கு சரிசமமாக போலீஸ் நிலையங்களில் இரவுப்பணிக்கும் பெண் போலீசார் அமர்த்தப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

அப்படி சரிசமமாக பணியாற்றும் வேளையில், பெண் போலீசாரும் சில வேளையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் கொடுமை சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம், திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அரங்கேறி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயதுடைய அவர், 2-ம் நிலை பெண் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் போலீசுக்கு இரவுப்பணி வழங்கப்பட்டிருந்தது. போலீஸ் நிலையத்தில் அவர், ‘பாரா’ பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அதே போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பாலசுப்பிரமணியன்(வயது54) என்பவரும் பணியாற்றி வருகிறார். அவருக்கும் இரவுப்பணி வழங்கப்பட்டிருந்தது. நள்ளிரவு வேளையில் ‘பாரா’ பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் நைசாக பேச்சுக்கொடுத்த பாலசுப்பிரமணியன், ஒரு கட்டத்தில் அவரை கட்டி அணைத்து சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கினார். செய்வதறியாது திகைத்த அந்த பெண் போலீஸ் பின்னர் சுதாரித்துக்கொண்டு, தனது காலில் அணிந்திருந்த ‘ஷூ’-வை கழற்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சில்மிஷத்தால் வெட்கி தலைகுனிந்த அந்த பெண் போலீஸ் அழுதுகொண்டே இரவு வேளையில் பணி முடிந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில், இரவு வேளையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், பெண் போலீசை கட்டி அணைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தது பதிவாகி இருந்தது. அதை ஆதாரமாக எடுத்து கொண்டு நேற்று அந்த பெண் போலீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் நேரில் சென்று புகார் அளித்தார். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் சூப்பிரண்டு, பணியின்போது தவறாக நடக்க முயன்ற காரணத்தால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் திருச்சி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story