4 ஆயிரத்து 61 கிராமங்களுக்கு மின் இணைப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


4 ஆயிரத்து 61 கிராமங்களுக்கு மின் இணைப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 9:04 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் 4 ஆயிரத்து 61 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, தனியார் வங்கி சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். இதில் கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசின் சார்பில் அனைத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரத்தை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீதம் மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 4 ஆயிரத்து 61 கிராமங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் அரிசியை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக முதல்-அமைச்சர் மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து 2-ம் கட்டமாக 30 டன் அரிசி வந்துள்ளது. துணை முதல்-அமைச்சர் 100 டன் அரிசியினை வழங்கி உள்ளார். மேலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 100 டன் அரிசி வழங்க உள்ளார்கள். இதேபோல பல்வேறு தொண்டு நிறுவனங்களின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story