நாமக்கல் உழவர் சந்தையில் 26½ டன் காய்கறிகள் ரூ.7.97 லட்சத்துக்கு விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 26½ டன் காய்கறிகள் ரூ.7 லட்சத்து 97 ஆயிரத்துக்கு விற்பனையானது.
நாமக்கல்,
நாமக்கல்-கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடைமழை மற்றும் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததால், நாமக்கல் உழவர்சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு கணிசமாக உயர்ந்து உள்ளது. விடுமுறை நாளான நேற்று நாமக்கல் உழவர்சந்தைக்கு 26½ டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது :-
இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வருவதால் நாமக்கல் உழவர்சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று (நேற்று) 244 விவசாயிகள் 26½ டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். இவற்றை 6 ஆயிரத்து 590 பொதுமக்கள் வாங்கி சென்றனர். இந்த காய்கறிகள் ரூ.7 லட்சத்து 97 ஆயிரத்து 540-க்கு விற்பனை செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.14-க்கும், கத்தரி கிலோ ரூ.50-க்கும், புடலைக்காய் கிலோ ரூ.24-க்கும், பாகல் கிலோ ரூ.40-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.40-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.32-க்கும், பிட்ரூட் கிலோ ரூ.30-க்கும், உருளை கிழங்கு கிலோ ரூ.36-க்கும், கேரட் கிலோ ரூ.48-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.22-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.24-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருப்பதால் அதன் விலை குறைந்து இருப்பதாகவும், கத்தரிக்காய் வரத்து குறைந்து இருப்பதால் அதன் விலை அதிகரித்து இருப்பதாகவும் உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story