தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையம் 6-வது கட்ட விசாரணை வியாபாரிகளின் வாக்குமூலம் பதிவு


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையம் 6-வது கட்ட விசாரணை வியாபாரிகளின் வாக்குமூலம் பதிவு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:15 AM IST (Updated: 17 Dec 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று ஒருநபர் ஆணையத்தின் 6-வது கட்ட விசாரணை நடந்தது. இதில் வியாபாரிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இதையடுத்து விசாரணை அதிகாரியான அருணா ஜெகதீசன் ஏற்கனவே 5 கட்டமாக விசாரணை நடத்தினார். அப்போது, துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்பட மொத்தம் 87 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நேற்று 6-வது கட்ட விசாரணை தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு ஆஜராவதற்காக வியாபாரிகள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 5 பேர் மட்டும் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணை தொடர்ந்து நாளை மறுநாள் வரை நடக்கிறது.

Next Story