வாகன சோதனையின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது


வாகன சோதனையின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2018 3:45 AM IST (Updated: 19 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வாகன சோதனையின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, 

கோவை பெரிய கடைவீதி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வீரப்பன் (வயது 56). இவருடைய தலைமையில் போலீசார் ராஜவீதி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் ஒருவர் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர், அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தகராறு செய்தார். மேலும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த நபர் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரப்பன் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறு செய்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த மன்சூர் அலிகான் (26) என்பது தெரியவந்தது.

அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Next Story