பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:00 AM IST (Updated: 21 Dec 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரியில் வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரி,

மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ண கோலமிட்டு கடவுளை வழிபடுவார்கள். இதைத்தொடர்ந்து வரும் தை மாதம் முதல் நாளில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி அதிகாலையில் வீடுகளில் பல வண்ண கோலமிட்டு, பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். இதைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் விழாக்களிலும் அனைத்து வீடுகள், விவசாய தோட்டங்களில் விதவிதமான கோலங்கள் போடப்படுவது வழக்கம்.

இதேபோன்று கிராமப்புறங்களில் பொங்கல் விழாவையொட்டி ஆங்காங்கே கோலப்போட்டிகள் நடத்தி சிறந்த கோலங்களை போடும் பெண்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். தை மாதத்தில் வரும் பண்டிகைகளில் கோலப்பொடிகள் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அவற்றை தயாரிக்கும் பணி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தர்மபுரி, ஏ.கொல்லஅள்ளி, பழைய தர்மபுரி, குண்டல்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் அரவை ஆலைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் கத்திரிப்பூ, ரோஸ் உள்ளிட்ட 10 வகையான நிறங்களில் கோலப்பொடிகள் மரவள்ளி கிழங்கு மாவு மூலம் தயாரிக்கபடுகிறது.

தர்மபுரியில் தயாரிக்கப்படும் பல வண்ண கோலப்பொடிகள் தர்மபுரி, சேலம், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தர்மபுரி பகுதியில் ஆண்டுதோறும் 5 டன் அளவில் வண்ண கோலப்பொடி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது பெண்கள் மத்தியில் வண்ண கோலப்பொடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த ஆண்டு உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. பல்வேறு வண்ணங்களில் கோலப்பொடியை தயாரிக்கும் தொழிலாளர்கள் அவற்றை உலர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு கிலோ வண்ண கோலப்பொடி ரூ.30-ல் இருந்து 40 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வண்ண கோலப்பொடியை ஏராளமான வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். இந்த கோலப்பொடிகளை சிறு வியாபாரிகள் பாக்கெட்டுகளில் அடைத்து சந்தைகள், மார்க்கெட்டுகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

Next Story