தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை


தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2018 11:00 PM GMT (Updated: 22 Dec 2018 8:49 PM GMT)

தவணை கட்டாததால் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் வடமழை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது 38). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி(35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

செந்தில்நாதன், திருவாரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விவசாயத்திற்காக தவணை முறையில் டிராக்டர் வாங்கியுள்ளார். இதற்கு மாதா மாதம் தவணை செலுத்தி வந்தார். சமீபத்தில் 1 மாதம் தவணை கட்டவில்லை.

இந்த நிலையில் நேற்று நாகையில் உள்ள மோட்டார் வாகன அலுவலகத்தில் டிராக்டரை பதிவு செய்வதற்காக செந்தில்நாதனின் டிரைவர் கேசவன் டிராக்டரை எடுத்து சென்றார். அங்கு பதிவு செய்துவிட்டு டிராக்டரை கேசவன் ஊருக்கு எடுத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது தவணைக்கு டிராக்டர் கொடுத்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிலர், கேசவன் ஓட்டி வந்த டிராக்டரை நாகையில் வழிமறித்து பறிமுதல் செய்து திருவாரூருக்கு எடுத்து சென்று விட்டனர்.

இதுகுறித்து டிரைவர் கேசவன், செந்தில்நாதனுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்நாதன் தனது மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story