கோவில்களில் ஆருத்ரா தரிசனம் தூத்துக்குடி மாவட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு


கோவில்களில் ஆருத்ரா தரிசனம் தூத்துக்குடி மாவட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 9:45 PM GMT (Updated: 23 Dec 2018 7:15 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சங்கரராமேசுவரர் கோவில்

தூத்துக்குடியில் சங்கரராமேசுவரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. விழாவின் 10-வது நாளான நேற்று திருவாதிரை திருவிழா நடந்தது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

ஆருத்ரா தரிசனம்

தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நடந்தது. பின்னர் பசு தீபாராதனை, தாண்டவ தீபாராதனை, திருமுறை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியையொட்டி பரதநாட்டியம் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதேபோன்று நாணல்காடு திருகண்டீசுவரர் கோவிலிலும் திருவாதிரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

கோவில்பட்டி-கழுகுமலை

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடராஜன்-சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, நடராஜன்-சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 4.30 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு கோவில் அரங்கில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து தாண்டவ தீபாரானையும் நடந்தது. இந்த பூஜையை சாமிநாத பட்டர் தலைமையில் செண்பகராமன், கோபாலகிருஷ்ணன், சங்கர் ஆகியோர் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் தெற்கு வாசலில் வைத்து நடராஜ பெருமாளுக்கும் அம்பாளுக்கும் மற்றும் மாணிக்க வாசகருக்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு நடராஜ பெருமாள் மற்றும் சிவகாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் கிரிவல பாதை வழியாக வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சைவ வேளாளர் சங்கம் சார்பில் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி-அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மீண்டும் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

அதேபோல் ஆறுமுகநேரி சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம் சிதம்பரேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு கோ பூஜையும் அதனை தொடர்ந்து ஆருத்ரா சிறப்பு வழிபாடும் நடந்தது. சுவாமி-அம்பாளுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story