காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி தப்புமா?

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
8 மந்திரிகள் பதவி ஏற்பு
இதனால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லையே என அடிக்கடி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் கூட்டணி ஆட்சிக்கு அவ்வப்போது நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதை சாதகமாக பயன்படுத்தி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதாவும் முயற்சி செய்து வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகிய 2 பேர் மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். கா்நாடக மந்திரி சபையை விரிவாக்கம் செய்த மறுநாளே, கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர்கள் திரும்ப, திரும்ப கூறி வந்தனர்.
ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் நடந்து இன்றுடன்(திங்கட்கிழமை) 2 நாட்கள் ஆகிறது. ஆட்சி கவிழ்வதற்கான எந்த அறிகுறியும் ெதன்படவில்லை. மந்திரி பதவியை இழந்தவர்கள் மற்றும் மந்திரி பதவி கிடைக்காதவர்கள், யாரும் போராட்டம் நடத்தவில்லை.
இழுக்க பா.ஜனதா முயற்சி
இதன் மூலம் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்றே சொல்லப்படுகிறது. மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், பிரதாப்கவுடா, நாகேந்திரா உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கரும் அதிருப்தியில் உள்ளார். அவர்களை இழுக்க பா.ஜனதா முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் பா.ஜனதா நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
பரபரப்பு தகவல்
அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வைக்க ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்யும்படி கர்நாடக தலைவர்களுக்கு அக்கட்சியின் மேலிடம் ரகசிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தலைவர்கள் சத்தம் இல்லாமல் இறங்கியுள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி தப்புமா? இல்லை கவிழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மீண்டும் விஸ்தரிப்பு
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை மீண்டும் விஸ்தரிக்கப்படும் என்று கூட்டணி ஒருங்கிணைப்பு தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று அறிவித்தார். இது கர்நாடக அரசியலில் மீண்டும் புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது என்றால் மிகையல்ல.
Related Tags :
Next Story