கோவில் பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் பலி: சுலவாடி கிராமத்தில் குமாரசாமி நேரில் விசாரணை நடத்துவார் தேவேகவுடா பேட்டி

கோவில் பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் பலியான சுலவாடி கிராமத்திற்கு இன்னும் 2 நாட்களில் முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சென்று விசாரணை நடத்துவார் என்று தேவேகவுடா கூறினார்.
மைசூரு,
கோவில் பிரசாதம் சாப்பிட்டு 17 பேர் பலியான சுலவாடி கிராமத்திற்கு இன்னும் 2 நாட்களில் முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சென்று விசாரணை நடத்துவார் என்று தேவேகவுடா கூறினார்.
17 பேர் பலி
மைசூரு டவுனில் நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் கூறியதாவது:-
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்டு 17 பேர் இறந்துள்ளனர். இது மிகவும் மோசமான விஷயம் ஆகும். இதுபோன்ற ஒரு செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாவச்செயல்
இன்னும் 80-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி நான் கடவுளை வேண்டுகிறேன். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலாவதாக பலியான 17 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களில் முதல்-மந்திரி குமாரசாமி சுலவாடி கிராமத்திற்கு நேரில் செல்ல உள்ளார். அங்கு சென்று அவர் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்வார். கர்நாடகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் எனக்கு மிகவும் மனவேதனையை தருகிறது. இது ஒரு பாவச்செயல்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story