சிவகிரி அருகே 2–வது நாளாக நீடிப்பு: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


சிவகிரி அருகே 2–வது நாளாக நீடிப்பு: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 5:36 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.

சிவகிரி, 

சிவகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.

காத்திருப்பு போராட்டம் 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி நகரப்பஞ்சாயத்து வடுகப்பட்டி– தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம் மெயின் ரோட்டில் கடந்த அக்டோபர் மாதம் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் தெற்கு சத்திரம்– தென்மலை செல்லும் சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும் தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மீண்டும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசைமதிவாணன் தலைமையில் நேற்று முன்தினம் தெற்கு சத்திரம்– தென்மலை சாலையில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சிவகிரி தாசில்தார் செல்வசுந்தரி, மண்டல துணை தாசில்தார் ஆனந்த், தென்காசி கோட்ட கலால் அலுவலர் சுதந்திர ராஜ், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஆடிவேல், வருவாய் ஆய்வாளர் சாமி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

2–வது நாளாக நீடிப்பு 

ஆனால் அவர்கள், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையொட்டி அங்கேயே தங்கியிருந்து சமையல் செய்து சாப்பிட்டனர். இந்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது. அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆண்கள், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களின் காத்திருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story