அஸ்திவாரம் தோண்டிய குழிக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டபோது மண் சரிந்து ஒருவர் சாவு; 3 தொழிலாளர்கள் காயம்

மதுரையில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய குழிக்குள் அமர்ந்து சாப்பிட்டபோது மண் சரிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார். மேலும் 3 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை,
மதுரை கீழவாசல் மைனா தெப்பக்குளம் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் அருகே புதிய வீடு கட்டும் பணியை சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார். அங்கு அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று காலை நடந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
அப்போது மதுரை அலங்காநல்லூர் அழகாபுரியை சேர்ந்த மதுரைவீரன்(வயது 42), குப்பாண்டி(42), சம்மட்டிபுரம் செல்வம்(40), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 4 பேரும் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பின்னர் மதிய வேளையில் அவர்கள் 4 பேரும் தோண்டிய குழிக்குள் அமர்ந்தவாறு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்த அவர்கள் மீது விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை போராடி மீட்டனர். இருப்பினும் மண் விழுந்ததில் மூச்சுத்திணறி மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
மேலும் இதில் படுகாயம் அடைந்த குப்பாண்டி, செல்வராஜ், செல்வம் ஆகியோரை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story