இண்டூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

இண்டூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.
பாப்பாரப்பட்டி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள மூக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செந்தாமரை (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணேசன் வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வருவதால் வாரத்தில் ஒரு முறை மட்டும் ஊருக்கு வந்து செல்வார்.
இதனால் செந்தாமரை குழந்தையுடன் மாமனார் துரை, மாமியார் நிர்மலா ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் செந்தாமரை மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை செந்தாமரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செந்தாமரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார். இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.