உர குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


உர குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Dec 2018 11:15 PM GMT (Updated: 28 Dec 2018 7:19 PM GMT)

ஈரோட்டில், உர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

ஈரோடு, 

ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ஈரோடு மூலபட்டறை காந்திபுரம் 1-வது வீதியில் சொந்தமாக விவசாய உர குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் என விவசாய இடுபொருட்கள் மொத்தமாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் குடோனை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதைத்தொடர்ந்து குடோன் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள், உர குடோனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். எனினும் தீ அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த உர மூட்டையில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் எரிந்து நாசம் ஆனது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய இடுபொருட்கள் தப்பியது.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதா? அல்லது யாரேனும் குடோனுக்கு தீ வைத்துள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story