பயிர் பாதிப்பின் அடிப்படையில் நிவாரண தொகை வழங்க வேண்டும் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர் பாதிப்பின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி லதா, வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ஆரோக்கியசுகுமார் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் சார்பில் சேங்கைமாறன், அய்யாச்சாமி, சந்திரன், கன்னியப்பன், வக்கீல் ராஜா, ஆதிமூலம், ராஜேந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் பாதிப்பின் அடிப்படையில் நிவாரண தொகையை வழங்க வேண்டும், காளையார்கோவில் அருகே மண் மேடுகளாலும், சீமைக் கருவேல மரங்களாலும் மூடிய நாட்டாறு கால்வாயை சீரமைக்க வேண்டும். ஆறுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும்.
பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அனைத்து கண்மாய்களுக்கும் முறையாக சென்று சேரவில்லை. மேலும் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வேளாண்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள போதுமானதாக இல்லை. எனவே வைகை அணையிலிருந்து கூடுதலாக தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுத்து அனைத்து கண்மாய்களிலும் நிரப்ப வேண்டும். இவை தவிர, வைகையாற்றின் கிளை நதியான கிருதுமால் ஆற்றுப்பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் அபாயக் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஆண்கள், பெண்களுக்காக தனித்தனி கழிப்பறை கட்டித்தர வேண்டும். எமனேசுவரம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்.
நிவாரண தொகை
தேவகோட்டை மற்றும் திருப்புவனம் பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைகளை ஒப்பந்ததாரருக்கு குத்தகை விடாமல் அரசே ஏற்று நடத்த வேண்டும். திருப்புவனத்தில் உள்ள மார்க்கண்டயே தீர்த்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி அந்த நிலங்களில் வனத்துறை மூலம் விலங்குகள், பறவைகள் பயன்பெறும் வகையில் பழவகை மரங்களை நடவு செய்ய வேண்டும்.
இந்த பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், புகார் செய்தவர் மீது, போலீசில் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதிலளித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான நிவாரண தொகை வந்துள்ளது. முழுமையான ஆய்வுக்கு பின் அந்த தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல கிருதுமால் அபாயக் கால்வாயிலும் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பற்றாக்குறை உள்ள கிராமங்கள் முறையாக மனு அளிக்கும் பட்சத்தில் அந்த கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து தரப்படும். அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். வாரச் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முறையாக அறிக்கை சமர்பித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் வரும் 2019-ம் ஆண்டு மே மாதத்துக்குள் முற்றிலும் அகற்றப்பட்டு, அந்த பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் பயன்பெறும் வகையில் பழ வகை மரங்கள் நடவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story