திருப்பூர் மாநகரில் வடமாநில தொழிலாளர்களுக்குள் அதிகரிக்கும் மோதல்


திருப்பூர் மாநகரில் வடமாநில தொழிலாளர்களுக்குள் அதிகரிக்கும் மோதல்
x
தினத்தந்தி 31 Dec 2018 3:30 AM IST (Updated: 31 Dec 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் வடமாநில தொழிலாளர்களுக்குள் அதிகரிக்கும் மோதல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

திருப்பூர், 

பனியன் தொழில் நகரான திருப்பூரில் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து பணியாற்றி வருகிறார்கள். அந்த நிலை மாறி வெளிமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. பனியன் நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் ஓட்டல், பல்பொருள் அங்காடி, கட்டிட வேலை உள்ளிட்ட வேலைகளிலும் வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாநகரில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.

தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தாலும், அவர்கள் மூலமாக நடக்கும் குற்ற சம்பவங்களால் காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. மாநகரில் கடந்த கால நிகழ்வுகளை பார்க்கும்போது கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு சொந்த ஊர் தப்பி விட்டதால் அந்த வழக்குகளில் துப்பு துலக்க முடியாமல் போய்விட்டது.

இதை கருத்தில் கொண்டு திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களையும் சேகரித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பிறகு தொழில் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துமாறு பலமுறை போலீஸ் உயர் அதிகாரிகள், தொழில் துறையினரிடம் வேண்டுகோள் வைத்து விட்டார்கள். இருப்பினும் இதுவரை வடமாநில தொழிலாளர்களின் முழுமையான விவரங்களை சேகரிக்க முடியாத நிலை தொடர்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது போலீசாருக்கு தலைவலியாக இருப்பது வடமாநில தொழிலாளர்களுக்குள் ஏற்படும் மோதல் சம்பவங்கள் தான். சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்களுக்குள் பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சாதாரண மோதல் கொலையில் முடிந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.

வடமாநில தொழிலாளர்களுக்குள் மோதல் ஏற்படும்போது அவர்கள் உடனடியாக கையில் கிடைக்கும் ஆயுதங்களை வைத்து தாக்கிக்கொள்கிறார்கள். இதில் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு விசாரணை மேற்கொள்ளும் போலீசார், காயம்பட்டவர், காயத்தை ஏற்படுத்தியவர் இருவரும் வடமாநிலத்தவர்களாக இருப்பதால் வழக்குப்பதிவு செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை. அதற்கு காரணம், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். மொழிப்பிரச்சினை ஒருபுறம், சம்பந்தப்பட்டவர்களை வடமாநிலத்துக்கு சென்று தேடி கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல் மறுபுறம் என வழக்குப்பதிவு வரை செல்லாமல் முடித்துக்கொள்கிறார்கள்.

திருப்பூரில் நேற்று ஒரே அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டபோது, ஒருவர் கத்தியால் மற்றொருவரை குத்திவிட்டார். லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இருவரும் ஒரே ஊரில் அருகருகே வசிப்பவர்கள். மேற்குறிப்பிட்ட காரணங்களால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய முடியாமல் போலீசார் திணறினார்கள்.

மாநகரில் வடமாநிலத்தவர்களின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுபோல் அவர்களுக்குள் ஏற்படும் மோதல் சம்பவங்களும் பெருகி வருகிறது. தொழில் நகரில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தலைதூக்குவது தொழில் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும். எனவே வடமாநில தொழிலாளர்களுக்குள் ஏற்படும் மோதலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை திருப்பூர் மாநகர காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பாகும். 

Next Story