உயர்மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக நாளை மறுநாள் விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை அமைச்சர் தங்கமணி பேட்டி

உயர்மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான பிரச்சினையில் விவசாய பிரதிநிதிகளுடன் நாளை மறுநாள் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து விவசாய சங்கங்களும் போராட்டங்களை வாபஸ் வாங்கி கொண்டு 3-ந் தேதி(நாளை மறுநாள்)என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளார்கள். அதன்படி, அன்று மாலை 3 மணியளவில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பான பிரச்சினை குறித்து விவசாய பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் 3 மாதத்திற்கு மட்டுமே தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்தபடி யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50 என்ற விலையில் இருந்து 25 காசுகள் குறைத்தே கொள்முதல் செய்கிறோம்.
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் குறைந்த விலைக்கு தான் மின்சாரத்தை வாங்கி உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்கினால் நாம் இந்த மின்சாரத்தை வாங்க வேண்டியதே இல்லை. இது தொழிற்சங்கத்திற்கு நன்றாக தெரியும். வேண்டுமென்றே குற்றச்சாட்டை சொல்கின்றனர்.
மத்திய அரசிடம் இருந்து 6,300 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். ஆனால் 3,800 மெகாவாட் மின்சாரம் தான் வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது. மின் மிகை மாநிலமாக உள்ளது. இங்கு எவ்வளவு பெரிய தொழிற்சாலைகள் வந்தாலும் தடையில்லாத மின்சாரம் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
Related Tags :
Next Story