ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைமாலை தயாரிக்கும் பணி தீவிரம்


ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சம் வடைமாலை தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2019-01-03T00:17:03+05:30)

ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வடைகள் தயாரிக்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல், 

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்படுகிறது. இதற்கு தேவையான வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன் படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story