பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை; 9 கடைக்காரர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை; 9 கடைக்காரர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:15 PM GMT (Updated: 2 Jan 2019 7:23 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 9 கடைக்காரர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று திருவள்ளூர்- தேரடி பகுதியில் உள்ள பிரபல துணிக்கடை மற்றும் ஓட்டல், ஆயில்மில் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் இனிப்பகம், திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள பிரபல துணிக்கடை, சி.வி.நாயுடு சாலையில் உள்ள ஒரு பெரிய ஓட்டல் என மொத்தம் 9 கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் துணிக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தார். அவ்வாறாக 9 கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மேற்கண்ட 9 கடைக்காரர்களுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்தராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story