சேலம் மாநகராட்சி பகுதியில் 4½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு


சேலம் மாநகராட்சி பகுதியில் 4½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-03T02:07:03+05:30)

சேலம் மாநகராட்சி பகுதியில் 4½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை பயன்பாட்டுக்கு வைத்திருந்த நிறுவனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம், 

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தடை விதித்துள்ளது. இதையொட்டி சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட முதல் அக்ரஹாரம், சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் துணிக்கடைகள், மொபைல் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்பாக சூரமங்கலம் மண்டலத்தில் 40 கடைகளில் 2 ஆயிரம் கிலோ, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 27 கடைகளில் 440 கிலோ, அம்மாபேட்டை மண்டலத்தில் 150 கடைகளில் 1,200 கிலோ மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 26 கடைகளில் 1,060 கிலோ என மொத்தம் 4 மண்டலங்களில் 243 கடைகளில் 4 ஆயிரத்து 700 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதாவது 4½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 243 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-

மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிகள் பொருட்கள் பறிமுதல் மற்றும் அபராதம் விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு குழுவினர் தினமும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்வார்கள். அப்போதுஅரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story