ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1¼ டன் பூக்களால் அலங்காரம்


ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1¼ டன் பூக்களால் அலங்காரம்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 7:30 PM GMT)

ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் 1¼ டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நாமக்கல், 

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த பக்தர்கள் கோவிலை பூக்களால் அலங்காரம் செய்தனர். கோவிலில் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என மலர்மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தனர். இதேபோல் சாமிக்கு இடபுறம் மற்றும் வலது புறத்தில் யானை உருவத்தை மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தனர். இது மிகவும் தத்ரூபமாக இருந்தது. இதற்காக வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதா என 4 நிறங்களில் 1¼ டன் சாமந்தி பூக்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.

Next Story