ரத்த வங்கி சிறந்த பராமரிப்பில் மாநில அளவில் வாலாஜா மருத்துவமனை 2-ம் இடம் ஊரகத்துறை இயக்குனர் பேட்டி
ரத்த வங்கி சிறந்த பராமரிப்பில் மாநில அளவில் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 2-ம் இடம் பிடித்துள்ளது என்று தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரகத்துறை இயக்குனர் ருக்மணி கூறினார்.
வாலாஜா ,
வாலாஜாவில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரகத்துறை இயக்குனர் ருக்மணி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, வார்டுகள், ஸ்கேன் பிரிவில் உள்ள நவீன கருவிகள், அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த மருத்துவமனையில் 27 டாக்டர்கள் பணியிடம் உள்ளன. அதில் 24 டாக்டர்கள் உள்ளனர். இதில் சித்த மருத்துவம், பல் மருத்துவம், இ.சி.ஆர். ஆகிய 3 டாக்டர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
மேலும் இந்த மருத்துவமனைக்கு ரூ.5 கோடி மதிப்பில் உள்நோயாளி பிரிவு மற்றும் புறநோயாளி பிரிவு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதில் உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. புறநோயாளி பிரிவு வருகிற பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட உள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 3 பேர் குணமாகி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது 17 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரைவில் அவர்களும் குணப்படுத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
இதுவரை 17 மாவட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்துள்ளேன். ரத்த வங்கி சிறந்த பராமரிப்பில் மாநில அளவில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனை முதலிடத்தையும், 2-ம் இடத்தை வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும் பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின், துணை இயக்குனர் சாந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) உஷா நந்தினி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story