சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: தம்பதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: தம்பதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:45 AM IST (Updated: 6 Jan 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம், 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 31), டிரைவர். இவருடைய மனைவி சங்கீதா(27). பெரியசாமி எடப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்வதற்கு ஆசைப்பட்டார். இதற்காக தனது மனைவியை மிரட்டி சம்மதிக்க வைத்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி சங்கீதா, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி அந்த சிறுமியை அழைத்து சென்றார். அப்போது பெரியசாமியும் உடன் சென்றார். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் பெருந்துறையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறுமியை மிரட்டியதுடன் கட்டாயப்படுத்தி பெரியசாமி திருமணம் செய்தார்.

இதற்கிடையில் அந்த சிறுமியின் பெற்றோர், தனது மகளை காணவில்லை என்று எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுமியை கடத்தி சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பெரியசாமி, உடந்தையாக இருந்ததாக சங்கீதா ஆகியோரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு கூறினார். அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பெரியசாமி, இதற்கு உடந்தையாக இருந்த சங்கீதா ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காந்திமதி ஆஜராகி வாதாடினார்.

Next Story