குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:57 AM IST (Updated: 6 Jan 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அரிபாபுவை குண்டர் சட்டத்தின் கீழ் கலெக்டர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள ராகவநாயுடுகுப்பம் ஆர்.பி.கண்டிகையை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் கருணாமூர்த்தி (வயது 30). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளாத்தூரை சேர்ந்த அரிபாபு என்கிற சூர்யா(31) என்பவருக்கு ரூ.4 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுகொண்ட அரிபாபு தான் கூறியதுபோல் குறிப்பிட்ட நேரத்தில் கருணாமூர்த்திக்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதைத்தொடர்ந்து கருணாமூர்த்தி பலமுறை அரிபாபுவை நாடி தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 3-11-2018 அன்று கருணாமூர்த்தி அரிபாபுவிடம் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டார்.

அப்போது அவரிடம் பேச்சு கொடுத்தபடி அழைத்து சென்ற அரிபாபு தன்னுடைய நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து கருணாமூர்த்தியை கொலை செய்து உடலை ஆந்திர மாநிலத்தில் புதைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிபாபு மற்றும் அவரது நண்பர்கள் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அரிபாபுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அரிபாபுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணை சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Next Story