8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்


8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:34 AM IST (Updated: 7 Jan 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டலாம்பட்டி,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சாலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வழியாக அமைகிறது. 8 வழிச்சாலையால் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த திட்டத்தை கைவிடக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் 8 வழிச்சாலை தொடங்கும் எல்லைப்பகுதியான சேலம் உத்தம சோழபுரம் பகுதியில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தில் நேற்று காலை விவசாயிகள் திரண்டனர். பின்னர் அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் சேலம், வீராணம், அயோத்தியாப்பட்டணம், நாழிக்கல்பட்டி, பூலாவரி, உத்தமசோழபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்துக்கு மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். மணிகண்டன், ரவி, நாராயணன், மூர்த்தி, செல்வராஜ் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:-

கையகப்படுத்தும் நிலத்துக்காக எவ்வளவு இழப்பீடு தந்தாலும் அதை ஏற்க மாட்டோம். எது நடந்தாலும் எங்களது விவசாய நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். பல தலைமுறைகளாக நாங்கள் விவசாய நிலத்தில் பயிர் செய்து வருகிறோம். இது தான் எங்கள் குடும்பத்துக்கு வாழ்வு அளிக்கிறது. அந்த நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். இதற்காக எத்தனை போராட்டங்கள் வந்தாலும் அதில் பங்கேற்று எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.ம.மு.க.வைச் சேர்ந்தவருமான எஸ்.கே.செல்வம், பா.ம.க. மாநில பொதுச்செயலாளர் அருள், த.மா.கா. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திர குமார், இந்திய கம்யூனிஸ்டு மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செல்லையா மற்றும் பலர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story