உப்பிலியபுரத்தில் பரபரப்பு சம்பவம்: கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் வங்கிக்கு தீ வைப்பு நகை, பணம் தப்பியது


உப்பிலியபுரத்தில் பரபரப்பு சம்பவம்: கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் வங்கிக்கு தீ வைப்பு நகை, பணம் தப்பியது
x
தினத்தந்தி 7 Jan 2019 11:15 PM GMT (Updated: 7 Jan 2019 7:42 PM GMT)

உப்பிலியபுரம் அருகே வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் வங்கிக்கு தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்.

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் மூங்கில் பஸ் நிறுத்தம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் ஏராளமான பொதுமக்கள் கணக்கு வைத்து உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் வங்கியின் பின்பகுதியில் உள்ள கழிவறை ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர், பணம், நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை தேடிப்பிடித்து அதை உடைக்க முயன்றனர்.

நீண்ட நேரம் போராடியும் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால், தோல்வியின் விரக்தியில் வங்கி மேலாளர் அறையில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், குளிர் சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்து விட்டு வந்த வழியாகவே தப்பி சென்று விட்டனர்.

வங்கியில் இருந்து புகை வருவதை பார்த்த பேரூராட்சி குடிநீர் தொட்டி ஆபரேட்டர் செல்வம் இதுகுறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு நேரில் சென்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியவர்த்தனன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வங்கிக்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்த வங்கி மேலாளர் பிரின்ஸ் ஆரோக்கியராஜாவும் உடனடியாக வங்கிக்கு வந்தார்.

பின்னர், வங்கியை திறந்து உள்ளே சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தாலும், கம்ப்யூட்டர், பிரிண்டர், குளிர்சாதன எந்திரம், மின்சாதன பொருட்கள் மற்றும் பல ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதையடுத்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வங்கியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் உடைக்க முயன்ற லாக்கரில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகள் இருந்ததாக தெரிகிறது. லாக்கரை உடைக்க முடியாததால் நகை, பணம் தப்பியது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்த வங்கிக்கும், போலீஸ் நிலையத்திற்கும் சுமார் 500 மீட்டர் தூரம்தான் இருக்கும். போலீஸ் நிலையத்திற்கு மிக அருகாமையில் உள்ள வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். 

Next Story