நாய் குறுக்கே வந்ததால் வீபரீதம், மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


நாய் குறுக்கே வந்ததால் வீபரீதம், மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jan 2019 10:30 PM GMT (Updated: 7 Jan 2019 7:44 PM GMT)

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெ.நா.பாளையம்,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையம் ரோடு குலுக்கை வீட்டார் வீதியை சேர்ந்தவர் பொன்.ஜெயம். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களது மகன் மோகன் (வயது 21). இவர் கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய கல்லூரி நண்பர் அருள் எட்வின் ராஜ் (22). மோகன், அருள்எட்வின்ராஜ் மற்றும் ஜெயராம் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள மோகனின் நண்பரின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜோதிபுரம் அருகே வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று நாய் வந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி, அருகில் இருந்த தனியார் கல்லூரி சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் அருள் எட்வின் ராஜ் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜெயராம் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகமது தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story