வத்தலக்குண்டுவில், மேற்கூரையை பிரித்து மின்சாதன கடையில் ரூ.2 லட்சம், கணினிகள் திருட்டு

வத்தலக்குண்டுவில், மேற்கூரையை பிரித்து மின்சாதன கடையில் ரூ.2 லட்சம், கணினிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எம்.குரும்பபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் வத்தலக்குண்டு-மதுரை மாநில நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிர்புறம் மின்சாதன பொருட்கள் கடை வைத்துள்ளார். இந்த கடையின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆனது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து முனியாண்டி, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வேளையில் கடையின் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டை பிரித்து மர்மநபர்கள் கடைக்குள் புகுந்தனர். பின்னர் கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.
நேற்று காலையில் வழக்கம்போல் முனியாண்டி கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் மேற்கூரையை சதுரமாக வெட்டி பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் மற்றும் விலையுயர்ந்த 2 கணினிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கடையின் உள்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள், பதிவாகும் கருவிகள் ஆகியவற்றையும் திருடி சென்றனர்.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் மேற்கூரையை பிரித்து பணம், கணினிகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story