ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.75 லட்சம் தருவதாக தொழில் அதிபரிடம் நூதன கொள்ளை 2 பேர் சிக்கினர்


ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.75 லட்சம் தருவதாக தொழில் அதிபரிடம் நூதன கொள்ளை 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 Jan 2019 10:00 PM GMT (Updated: 2019-01-08T23:13:30+05:30)

ரூ.50 லட்சம் கொடுத்தால் ரூ.75 லட்சம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் நூதன கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை சூளையை சேர்ந்தவர் முகமது இம்ரான்(வயது 25). பெரியமேட்டில் தோல் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரிடம் முகமது கனி என்ற நபர் அறிமுகமானார். அவர் மூலக்கடையில் உள்ள ரசூல்கான் என்பவரிடம் ரூ.50 லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதில் அவர் ரூ.75 லட்சத்திற்கு 100 ரூபாய் நோட்டுகளாக கொடுப்பார். இதனால் கூடுதலாக நமக்கு ரூ.25 லட்சம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இந்த வார்த்தையில் மயங்கிய முகமது இம்ரான் ரூ.50 லட்சம் கொடுப்பதற்கு சம்மதித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் உள்ள இவர்களது மற்றொரு தோல் தொழிற்சாலைக்கு சென்று அங்கு சில பொருட்கள் வாங்கி வருவதற்காக முகமது இம்ரான் அவரது தம்பி முகமது இனாம், இவர்களது ஆடிட்டர் ஆகியோர் காரில் புறப்பட்டனர்.

அப்படியே மூலக்கடைக்கு சென்று ரசூல்கானிடம் பணத்தையும் மாற்றிக் கொண்டு செல்லலாம் என முடிவு செய்தனர். இதனையடுத்து ரூ.75 லட்சம் தருவதாக கூறிய ரசூல்கானை தொடர்பு கொண்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளதாக கூறிய ரசூல்கான், முகமது இம்ரான் மற்றும் அவர்களுடன் காரில் சென்றவர்களை பல இடங்களில் சுற்ற வைத்துள்ளார். கடைசியாக ரூ.50 லட்சத்துடன் அய்யப்பன் தாங்கல் வரும்படி முகமது இம்ரானிடம் கூறினார்.

இதன்பின்பு அவர் அய்யப்பன்தாங்கல் அருகே சென்றபோது இவர்களது காரை பின்தொடர்ந்த மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் முகமது இம்ரான் காரை மடக்கியுள்ளனர். அந்த கும்பலை சேர்ந்த 5 பேர் தங்களை போலீசார் எனக் கூறிக் கொண்டு முகமது இம்ரான் காரை சோதனையிட்டுள்ளனர்.

அதில் ஒரு நபர் போலீஸ் சீருடையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன முகமது இம்ரான் மற்றும் அவரது தம்பி, ஆடிட்டர் ஆகியோர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் காரில் இருந்த ரூ.50 லட்சத்தை பறித்தனர். போலீஸ் நிலையத்தில் வந்து கணக்கு காட்டி விட்டு பணத்தை வாங்கி செல்லும்படி கூறி விட்டு அவர்கள் காரில் தப்பினார்கள்.

இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த முகமது இம்ரான் அந்த காரை பின் தொடர்ந்து சென்றார். காட்டுப்பாக்கம் அருகே சென்ற போது போலீஸ் எனக்கூறி பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலின் காரில் இருந்து ஒருவர் இறங்கி வேறு ஒருவர் ஏறினார். இதனை தொடர்ந்துதான் அவர்கள் போலீசார் அல்ல. மோசடி கும்பல் என முகமது இம்ரானுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் அந்த கும்பலில் இருந்த ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தார். உடனே இது குறித்து போரூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 51) என்பதும் ராணுவத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது. மூலக்கடையை சேர்ந்த முகமது கனி என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து முகமது கனியை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது ரசூல்கான்தான் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

பணம் மோசடி செய்த வழக்கில் ரசூல்கான் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் சங்கர் நாராயணன், கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சத்துடன் தப்பி ஓடிய ரசூல்கான் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story