இரிடியம் தருவதாக ரூ.1¼ கோடி மோசடி செய்த 2 பேர் கைது


இரிடியம் தருவதாக ரூ.1¼ கோடி மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:15 AM IST (Updated: 10 Jan 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் இரிடியம் தருவதாக ரூ.1¼ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்தை திருப்பி கொடுக்காத தொழிலாளியை கடத்திய 2 பேர் சிக்கினர்.

நத்தம், 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (28). இவர்களிடம் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரையா (57), ஆனந்த்பாபு (30) ஆகியோர் இரிடிய கலசம் தருவதாக கூறி ரூ.1 கோடியே 20 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரிடியம் கலசத்தை வாங்குவதற்கு முத்துக்குமாரும், மனோஜும் நத்தத்துக்கு வந்தனர். அவர்கள் வீரையா, ஆனந்தபாபுவிடம் இரிடியம் அல்லது பணத்தை திரும்ப தருமாறு கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முத்துக்குமார், நத்தம் போலீசில் அவர்கள் மீது புகார் கொடுத்தார்.

அதன் பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு இரிடியம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வீரையா, ஆனந்த்பாபு ஆகியோரை கைது செய்தார். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கைதான வீரையாவின் மனைவி விஜயா, நத்தம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பணத்தை திருப்பி தரக்கோரி கடந்த 7-ந்தேதியன்று தனது கணவர் வீரையாவை கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ் ஆகியோர் காரில் கடத்தி சென்று விட்டனர்.

பின்னர் அவர்கள், மீண்டும் நத்தத்தில் இறக்கி விட்டு சென்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். 

Next Story