பொங்கல் பரிசுத்தொகுப்பு நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியல்


பொங்கல் பரிசுத்தொகுப்பு நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Jan 2019 9:45 PM GMT (Updated: 10 Jan 2019 7:46 PM GMT)

மத்தூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 2 நாட்களாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் காலை முதலே ரேஷன் கடையில் குவிகின்றனர். நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று சில குடும்ப அட்டைதாரர்களுக்கு கோர்ட்டு உத்தரவுபடி ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story