மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூரில் பரபரப்பு அஜித் படம் வெளியான தியேட்டரில் 25 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்தது; ரசிகர்கள் 6 பேர் படுகாயம் + "||" + In Thirukovilur Furore A 25-foot cut-out collapsed in Ajith's film Theater, 6 people were injured

திருக்கோவிலூரில் பரபரப்பு அஜித் படம் வெளியான தியேட்டரில் 25 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்தது; ரசிகர்கள் 6 பேர் படுகாயம்

திருக்கோவிலூரில் பரபரப்பு அஜித் படம் வெளியான தியேட்டரில் 25 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்தது; ரசிகர்கள் 6 பேர் படுகாயம்
திருக்கோவிலூரில் அஜித் படம் வெளியான தியேட்டரில் பால் அபிஷேகம் செய்த போது 25 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்தது. இதில் ரசிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருக்கோவிலூர், 

நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று திரையிடப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் செவலை சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது. இதனையொட்டி தியேட்டர் முன்பு ரசிகர்கள் பேனர் மற்றும் அஜித்தின் 25 அடி உயர கட்-அவுட் வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணி சிறப்பு முதல் காட்சியை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரையங்கம் முன்பு திரண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் அஜித்குமாரின் கட்-அவுட் மீது ஏறி பால் அபிஷேகம் செய்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத வகையில் கட் அவுட் சரிந்து கீழே விழுந்தது.

இதில் அஜித் ரசிகர்களான ஆவியூரை சேர்ந்த ஜீவா மகன் ஏழுமலை(வயது 20), கொளத்தூரை சேர்ந்த செல்லப்பாணி மகன் ஸ்ரீதர்(25), காடகனூரை சேர்ந்த சங்கர் மகன் முத்தரசன்(18), வடகரை தாழனூரை சேர்ந்த நமச்சிவாயம் மகன் பிரதாப்(21), மணி மகன் அருண்(17), எறையூரை சேர்ந்த சக்கரையாஸ் மகன் பிரபாகரன்(25) ஆகிய 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்த அங்கு திரண்டிருந்த அஜித் ரசிகர்கள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரதாப், முத்தரசன், ஸ்ரீதர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.