கர்நாடகத்தில் அரசு-தனியார் பங்களிப்பில் ஏரிகள் மேம்படுத்தப்படும் குமாரசாமி அறிவிப்பு


கர்நாடகத்தில் அரசு-தனியார் பங்களிப்பில் ஏரிகள் மேம்படுத்தப்படும் குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 3:45 AM IST (Updated: 11 Jan 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசு-தனியார் பங்களிப்பில் ஏரிகள் மேம்படுத்தப்படும் என்றும், பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடக ஏரிகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாக கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஏரிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை ஒரே இரவில் சரிசெய்துவிட முடியாது. சில விஷயங்களில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற...

ஏரிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஒரு திட்ட அறிக்கையை தயாரித்து அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஏரிகளை மேம்படுத்தும் பணியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பெங்களூருவில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழை காலத்தில் நீர் எந்த தடங்கலும் இன்றி ஏரிகளுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்கள் மீது வீடுகளை கட்டியுள்ள ஏழைகளுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஒரு திட்ட அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும்.

சுத்திகரிப்பு மையங்கள்

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிக்க தேவையான சுத்திகரிப்பு மையங்களை அமைக்க வேண்டும். பெங்களூருவில் 204 ஏரிகள் உள்ளன.

மனித கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளால், பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உண்டாகிறது. சில நேரங்களில் தீப்பிடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. கழிவுநீர், ஏரிகளுக்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரிகள் பாதுகாப்பு

தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிடர்ஜென்டுகளில் பாஸ்பேட், சல்பேட் ரசாயனத்தை சேர்க்க தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி பெல்லந்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஏரிகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு திட்ட அறிக்கையை தயாரித்துள்ளது.

விரைவாக அனுமதி

அந்த திட்ட அறிக்கையை, பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான குழுவின் ஒப்புதல் பெற்று அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரிகளை மேம்படுத்த நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். ஏரிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு விரைவாக அனுமதி வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அதுகுறித்து ஒரு விவரமான ஒப்பந்தத்தை போட வேண்டும்.

தூர் வார வேண்டும்

அரசு-தனியார் பங்களிப்பில் ஏரிகள் மேம்படுத்தப்படும். மழை காலம் தொடங்குவதற்கு முன்பு ஏரிகளில் தூர் வார வேண்டும். இதன் மூலம் ஏரிகளில் அதிக நீரை சேமிக்க முடியும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜூ மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேவையான உதவிகள்

கர்நாடக தொழில் வர்த்தகசபை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, ஏரிகளை மேம்படுத்த தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.

Next Story