ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 11 புதிய அரசு பஸ்கள்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 11 புதிய அரசு பஸ்கள் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து துறை சார்பில் கடந்த 7–ந்தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 555 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். இதில் காரைக்குடி மண்டலத்திற்கு 24 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 11 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பஸ்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 11 புதிய பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் சிங்காரவேலன், ராமநாதபுரம் கோட்ட மேலாளர் சரவணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய பஸ்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 2 பஸ்களும், சேலத்துக்கு ஒரு பஸ்சும், திருச்செந்தூருக்கு 2 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதேபோல பரமக்குடி–திருப்பூர் வழித்தடத்தில் 1 பஸ்சும், முதுகுளுத்தூர்–திருப்பூர் வழித்தடத்தில் 1 பஸ்சும், கமுதி–மதுரை வழித்தடத்தில் 1 பஸ்சும், ராமேசுவரம்–திருப்பூர் வழித்தடத்தில் 1 பஸ்சும், ராமேசுவரம்–கம்பம் வழித்தடத்தில் 1 பஸ்சும், ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் 1 பஸ்சும் என 11 பஸ்கள் இயக்கப்படுகின்றன.