கம்மவான்பேட்டையில் விளையாட்டு மைதானம் - கலெக்டர் ராமன் திறந்து வைத்தார்


கம்மவான்பேட்டையில் விளையாட்டு மைதானம் - கலெக்டர் ராமன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:30 PM GMT (Updated: 16 Jan 2019 9:20 PM GMT)

கம்மவான்பேட்டை கிராமத்தில் விளையாட்டு மைதானத்தை கலெக்டர் ராமன் திறந்து வைத்தார்.

கணியம்பாடி,

கணியம்பாடியை அடுத்துள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர்கள் என்.தேவராஜ், தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ராணுவ வீரர் விஸ்வநாதன் வரவேற்றார்.

விழாவில் வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் கலந்துகொண்டு, விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘கம்மவான்பேட்டை கிராமத்தை சேர்ந்த 3 ஆயிரம் பேர் ராணுவத்தில் பணிபுரிந்து வருவது வேலூர் மாவட்டத்திற்கே பெருமை யாகும். இந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ராணுவ பணியில் சேரவே அதிகம் விரும்புகின்றனர். ராணுவ வீரர்கள் எல்லையில் ஓய்வின்றி பணியாற்றுவதால் நாம் பாதுகாப்போடு இருக்கிறோம். இந்த விளையாட்டு மைதானத்தில் விரைவில் கூடைப்பந்து பயிற்சிக் கூடம் அமைத்துத் தரப்படும்’ என்றார்.

அதைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் சார்பில், கலெக்டர் ராமனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லட்சுமணன், முன்னாள் கவுன்சிலர் ஏழுமலை, வேலூர் தாசில்தார் ரமேஷ், கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.இ.சிவாஜி, முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க அமைப்பாளர் பாண்டியராஜன், வக்கீல் ரவீந்திரநாதன், கண்ணமங்கலம் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலெக்டர் ராமன் விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முடிவில் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story