மதுரையில் ரூ.345 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்
மதுரையில் ரூ.345 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் துணை முதல் –அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.
மதுரை,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், மதுரை நகரில் ரூ.344 கோடியே 76 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ரூ.159 கோடியே 70 லட்சம் செலவில் பெரியார் மற்றும் காம்பளக்ஸ் பஸ் நிலையங்கள் இணைக்கப்பட்டு சீரமைக்கப்படுகின்றன.
ரூ.81 கோடியே 41 லட்சம் செலவில் ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை உள்ள வைகை ஆற்றுக்கரை புனரமைக்கப்படுகின்றன. மேலும் ரூ.40 கோடியே 19 லட்சம் செலவில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் நவீன வாகன நிறுத்துமிடம், புராதன அங்காடி மையம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைக்கப்படுகின்றன.
ரூ.2 கோடியே 42 லட்சம் செலவில் பெரியார் பஸ் நிலையம் அருகில் சுற்றுலா பயணிகளுக்கு தகவல் மையம், ரூ.21 கோடியே 70 லட்சம் செலவில் புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடம், ரூ.4 கோடியே 19 லட்சம் செலவில் ஜான்சிராணி பூங்கா அருகில் சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி மையம், ரூ.7 கோடியே 91 லட்சம் செலவில் குன்னத்தூர் சத்திரத்தில் கடைகள் கட்டுதல், ரூ.15 கோடியே 24 லட்சம் செலவில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் சீரமைப்பு, ரூ.12 கோடி செலவில் திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகள் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பெரியார் பஸ் நிலையத்தில் நடக்கிறது. அதற்காக விழா மேடையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்குகிறார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார்–காம்பளக்ஸ் பஸ் நிலையங்களை இணைத்து மிகப்பெரும் நவீன பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக அங்கிருந்த கடைகளை அகற்ற மாநகராட்சி விதித்த கெடு முடிந்து விட்டது. ஒரிரு கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன.
மேலும் பெரியார் நிலையத்திற்கு மாற்றாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்களை நிறுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 21–ந் தேதி நடக்கிறது. அதில் பஸ்களை எங்கு நிறுத்துவது என்று முடிவு செய்யப்படும். அதன்பின் பெரியார் பஸ் நிலையம் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.