அரசு மரியாதையுடன் நடந்தது சிவக்குமார சுவாமி உடல் அடக்கம் 10 லட்சம் பக்தர்கள் அஞ்சலி மத்திய அரசு சார்பில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்


அரசு மரியாதையுடன் நடந்தது சிவக்குமார சுவாமி உடல் அடக்கம் 10 லட்சம் பக்தர்கள் அஞ்சலி மத்திய அரசு சார்பில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:04 PM GMT (Updated: 22 Jan 2019 11:04 PM GMT)

மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக் குமார சுவாமியின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நேற்று நடைபெற்றது. சுமார் 10 லட்சம் பக்தர்கள் சிவக்குமார சுவாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூருவில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தகங்கா மடம் உள்ளது.

இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவக்குமார சுவாமி. 111 வயதான இவர் கர்நாடக மக்களால் நடமாடும் கடவுள் என்று அழைக்கப்பட்டு வந்தார். வயோதிகம் காரணமாக மடாதிபதி சிவக்குமார சுவாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மடத்தில் வைத்தே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல் நிலை முன்னேற்றம் அடைவதும், மோசமாவதுமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மடாதிபதி சிவக்குமார சுவாமி மரணம் அடைந்தார். அவரது உடல் மடத்தின் வளாகத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

சிவக்குமார சுவாமியின் உடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து, அஞ்சலி செலுத்தினர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து நேற்று மாலை 5 மணி வரை பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த 25 மணி நேரத்தில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அஞ்சலி செலுத்தியதாக மடத்தின் நிர்வாகி ஒருவர் மதிப்பிட்டார். மத்திய அரசு சார்பில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் வந்து மலர் வளையம் வைத்து சிவக்குமார சுவாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்திய மந்திரி சதானந்தகவுடா, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரிகள் எம்.பி.பட்டீல், டி.கே.சிவக்குமார், யோகா குரு பாபா ராம்தேவ், வீரப்பமொய்லி எம்.பி. மற்றும் மாநில மந்திரிகள், பல்வேறு கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கா்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சிவக்குமார சுவாமி உயிருடன் இருந்தபோது, அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கான சமாதி கட்டிடத்தை கட்டி இருக்கிறார். அந்த சமாதியில் தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

அதற்கு முன்பு சிவக்குமார சுவாமியின் உடல், ருத்ராட்சை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவருடைய உடலில் தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. அந்த சமாதி கட்டிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சாமாதிக்குள் சிவக்குமார சுவாமியின் உடல் இறக்கி அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவக்குமார சுவாமியின் உடல் சுற்றிலும் விபூதிகட்டிகள் வைக்கப்பட்டன. 100 கிலோ விபூதியால் மூடப்பட்டது. அத்துடன் உடல் அடக்கம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

துமகூரு மடத்தில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ அங்கு சென்று பாதுகாப்பு பணிகளை கவனித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தபோதும் அவர்கள் நீண்ட வரிசையில் வந்து அமதியாக அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். பக்தர்களின் வசதிக்காக துமகூரு மாவட்டத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து துமகூருவுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

முதல்-மந்திரி குமாரசாமி, எடியூரப்பா மற்றும் மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார சுவாமியின் உடல் அடக்கம் செய்யும் வரை அங்கேயே இருந்தனர். இறுதிச் சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொண்டனர்.

அஞ்சலி செலுத்த வந்த பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மடத்தின் வளாகம் மற்றும் நகரின் பிற பகுதிகள் என மொத்தம் 10 இடங்களில் உணவு வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 10 லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Next Story