கிராம மக்களிடம் அமைச்சர் கமலக்கண்ணன் குறைகேட்டார் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்


கிராம மக்களிடம் அமைச்சர் கமலக்கண்ணன் குறைகேட்டார் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

வலத்தாமங்களம், தேவமாபுரம், கிராம மக்களிடம் அமைச்சர் கமலக்கண்ணன் குறைகேட்டார். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கிராம மக்கள் வலியுறுத்தினர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த கருக்கன்குடி கிராமத்தில் இருந்து தமிழக பகுதியான கும்பகோணம், மயிலாடு துறைக்கு பஸ் வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே காரைக்காலில் இருந்து கருக்கன்குடி வழியாக அரசு பஸ் இயக்கவேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் காரைக்காலில் இருந்து கருக்கன்குடி வழியாக புதிய வழித்தடத்தில் கும்பகோணத்துக்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த பஸ் சேவை நேற்று தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) விக்ராந்த் ராஜா, வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து அதிகாரிகள் செந்தில், ராஜா, கிராம பஞ்சாயத்தார்கள் தலைவர் அப்துல் ஹமீது, த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜா முகமது மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து வலத்தாமங்களம், தேவமாபுரம், கருக்கன்குடி பேட் கிராமங்களுக்கு சென்ற அமைச்சர் கமலக்கண்ணன், பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது சாலை, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளிடம் கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.

Next Story